loading
09 August 2020
Register Here

கினாரா கேபிடல்.காம்


கட்டுரையாளர்: சேதுராமன் சாத்தப்பன்



சமீப காலத்தில் குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம் என்னவென்றால் சிறிது தடை இல்லாத மின்சாரம். இது தவிர அவர்களுக்கு பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். அதாவது “வொர்கிங் கேபிடல்”. இது வங்கிகளால் வழங்கப்பட்டாலும், பல வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவதில்லை. காரணம் சிலர் சரியாக கட்டாதது. அதனால் வங்கி மேலாளர்களுக்கு ஏற்படும்பிரச்னைகள். அப்படியே கடன் கொடுக்க முன் வந்தாலும் சொத்து ஜாமீன் கேட்கப்பட்டதால் பலரால் தர இயலவில்லை.

ஆனால், 2016ம் வருடத்திற்கு பிறகு வந்த “ஸ்டார்ட் அப்” அலையில் பல புதிய என்.பி.எப்.சி., (நான் பாங்கிங் பைனான்ஸ்) கம்பெனிகள் வந்தன. இதில் பல கம்பெனிகளுடைய கவனமே இந்த குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளாக இருந்தன.

இதில் முக்கியமான கம்பெனிகளில் ஒன்று கினாரா கேபிடல் (Kinara Capital). பெங்களூரை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த கம்பெனி சொத்து ஜாமீன் இல்லாத குறு, சிறிய மற்றும் நடுத்தர (எம்.எஸ்.எம்.ஈ.,) கம்பெனிகளுக்கு கடன்கள் கொடுத்து வருகிறது.

5 முதல் 7 நாட்களில் கடன் கொடுப்பதைப் பற்றிய முடிவுகளை எடுத்து விடுகிறது (அதாவது கொடுக்க முடியுமா, முடியாதா என்ற முடிவுகளை). கடன் வாங்குபவரின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவுகிறது. இவர்களுக்கு 25,000 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை சுமார் 1,000 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளது. குறைந்தபட்ச கடன் ரூபாய் 2,00,000. அதிகபட்ச கடன், ரூபாய் 25,00,000. வங்கிகளின் வட்டி விகிதத்தை வைத்து பார்க்கும்போது வட்டி சிறிது அதிகமாக இருக்கிறது. ஆனால் உங்கள் தேவைக்கும், நேரத்திற்கு கடன் கிடைக்கும் என்ற கியாரண்டி இருக்கும் என்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு வாங்கலாம்.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் கிளைகள் வைத்துள்ளது. மேலும் விபரங்களுக்கு இவர்களுடைய இணையதளத்தை பார்க்கவும் www.kinaracapital.com.

+++++++++++++++++++



மாற்றுத் திறானாளிகள் வாழ்வாதாரம் உயர!


கட்டுரையாளர்: சேதுராமன் சாத்தப்பன்


2001ஆம் ஆண்டு அறிக்கை படி இந்திய மக்கள் தொகையில் 2.1 சதவீத மாற்றுத் திறனாளிகள் இருந்திருக்கிறார்கள். 2011 ஆண்டு அறிக்கைப்படி இது 2.21 சதவீதமாக இருக்கிறது. இதில் ஆண்கள் 55.6 சதவீதமும் பெண்கள் 44.4% இருக்கிறார்கள். இவர்களில் கிராமப்புறங்களில் 66 சதவீதமும், நகர்ப்புறங்களில் 33 சதவீதமும் இருக்கிறார்கள்.

இவர்களின் வாழ்வாதாரம் உயருவது மிகவும் முக்கியம். இதற்கென இந்தியாவில் பல லாப நோக்கில்லா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரையும் இணைக்கும் விதமாக, மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும், தயாரிக்கும் பொருட்களை அனைவரையும் இணைத்து ஒரு இணையதளம் மூலம் இவர்கள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கைப்பை, மணிபர்சுகள், விளையாட்டு சாமான்கள், ஆடைகள், ஸ்டேஷனரி, வீட்டு அலங்கார பொருட்கள், புத்தகங்கள் என்று பலதரப்பட்ட பொருட்களையும் இந்த இணையதளம் மூலம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது மாற்றுத்திறனாளிகளுக்கு கண்களை தானமாக கொடுக்க முன்வந்தால் அவர்களுக்கென ஒரு பகுதியைத் தனியே ஏற்படுத்தி இருக்கிறாரக்ள். இன்றைய தினத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள், தீபாவளி, புது வருடம் போன்ற தினங்களுக்கு பலவிதமான பரிசு பொருட்களை தங்களுடைய வாடிக்கையாளருக்கு அளிக்கிறார்கள் அந்த பரிசு பொருட்களை மொத்தமாக இவர்களிடமிருந்து வாங்குவதற்கான தனியே ஒரு பகுதி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் திறமைகள் உயர பயிற்சி மற்றும் கருத்தரங்கு பல இடங்களில் நடத்தப்படுகின்றன.

2018 ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளை சிறந்த அமைப்பு என தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

www.giftabled.com

www.giftabled.org



வந்தாச்சு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் பாலிசி!


கட்டுரையாளர்: சேதுராமன் சாத்தப்பன்

‘‘தமிழ்நாடு இன்னும் தனக்கென தனியாக ஒரு ஸ்டார்ட் அப் பாலிசி கொண்டு வரவில்லை. இதற்காக பல வருடங்களாக பேசி வருகிறது. பாலிசியும் ரெடியாகி விட்டது. தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்கள், கிராமங்கள் முன்னேறும் வகையில் அங்கு ஸ்டார்ட் அப்-கள் அமைக்கும் வகையில் பாலிசி அமையும் எனத் தெரிகிறது. ஆனால் இன்னும் அறிமுகமாகவில்லை. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கேன் என்ற பாணியில் நல்ல ஒரு ஸ்டார்ட்அப் பாலிசி தமிழ்நாட்டிற்கு தேவை...’’

–2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தினமலர் நாளிதழில் நாம் எழுதிய கருத்துக்கள். சரியாக ஒரு வருடம் கழித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாடு சமயத்தில், ஒரு பாலிசியை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. இந்த பாலிசி எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டின் பாலிசி ஐந்து வருட பாலிசியாக இருக்கும். இந்த பாலிசி 2023 ஆம் வருடம் வரை அமலில் இருக்கும். ஸ்டார்ட் அப் தொழில்களில் முதலீடு செய்வதற்காக 250 கோடி ரூபாய் அளவில் ஒரு பண்ட் ஆரம்பித்துள்ளது.

ஸ்டார்ட் அப் தொழிலில் மக்களை ஊக்கப்படுத்துவதன் மூலமாக 2023 ஆம் வருடத்திற்குள் ஒரு இலட்சம் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 250 கோடி ரூபாய் பண்டை, சிட்பி நிறுவனம் மூலமாக ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உங்களது ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெறுவதற்கு தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் என்ற நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுவது அவசியமாகும்.

நீங்கள் ஆரம்பித்திருக்கும் ஸ்டார்ட் அப் ஏழு வருடத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் ஒரு வருடத்திற்கு 25 கோடி ரூபாய் விற்பனையை தாண்டி இருக்கக்கூடாது.

இதுதவிர "தமிழ்நாடு ஸ்டார்ட் அப் செய்து கிராண்ட் ஸீட் பண்ட்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபண்டின் மூலமாக முதல் வருடத்தில் ஐந்து கோடி ரூபாய் வங்கிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்படும்.

இந்த ஐந்து கோடி ரூபாய் புதிதாக ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தங்களுடைய ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. அதாவது உங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆரம்பிக்கும் ஐடியா இருந்தால் அதை முழுமையான வடிவத்துக்கு கொண்டு வருவதற்கான உதவிகளை வங்கிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமாக இந்த கிராண்ட் உங்களுக்கு செய்யும்.

தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் மையங்கள் சென்னையை தவிர கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் அமைக்கப்படும்.

இந்தக் கொள்கையின் ஒரு புதிய அம்சமாக, தமிழ்நாடு அரசு நிறுவனங்களும், மத்திய அரசு நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் தொடங்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது ஸ்டார்ட் அப் ஐடியாக்களுக்கு வடிவம் கொண்டு வரும் விதமாக உதவி செய்ய உதவும். மேலும் இந்த அரசு நிறுவனங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்து அவர்களுக்கு இந்த ஸ்டார்ட் அப்கள் தங்கள் கருத்துக்களை சொல்லும் விதமாகவும் இது இருக்கும்.

=******************



பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்கள் பொருட்களையும் விற்கலாம்


கட்டுரையாளர் -சேதுராமன் சாத்தப்பன்

‘பிளிப்கார்ட்’ இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்று. நமது உற்பத்தி பொருட்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது என்று எல்லாருக்குமே ஒரு ஆதங்கம் எப்போதும் இருக்கும். இந்த ஆதங்கத்தை போக்க ஆபத்பாந்தவனாக வருகிறது பிளிப்கார்ட்.
ஏன் பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் நீங்கள் விற்க வேண்டும்?
ஆன்லைன் சந்தையில் பிளிப்கார்ட் லீடராக இருக்கிறது. இன்றைய தினம் அதன்கீழ் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 80 லட்சம் ஷிப்மெண்ட் அனுப்புகிறார்கள். அதுவும் இந்தியாவில் ஆயிரம் ஊர்களுக்கு மேலாக. அங்கெல்லாம் பொருட்களை அனுப்பும் வசதி அவர்களிடம் இருக்கிறது.
பிளிப் கார்ட்டில் இருந்து நமக்கு பணம் எப்படி கிடைக்கிறது?
நீங்கள் அவர்களிடம் பதிவு செய்து கொண்ட பிறகு, உங்கள் பொருட்களை விற்றவுடன் உங்களுக்கு பணம் 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் கிடைத்துவிடுகிறது.
உங்கள் பொருட்கள் விலையை யார் நிர்ணயிப்பார்கள்?
ஆன்லைனில் விற்கும்போது உங்கள் பொருட்களின் விலையை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களைப் போலவே, உங்கள் பொருட்களை போலவே விற்பனை செய்யும் பலர் இந்த ஆன்லைன் சந்தையில் இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்கள் பொருட்களின் விலை நியாயமாக இருக்கும் பட்சத்தில்தான் உங்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்களது பொருட்களை சந்தைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா ?
ஆன்லைன் சந்தையில் உங்கள் பொருட்களை காட்சிப்படுத்த பணம் எதுவும் கட்ட வேண்டாம். ஆனால் நீங்கள் சரக்குகளை பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தை மூலமாக விற்ற பின் அவர்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்த கமிஷனை கழித்துக்கொண்டு மீதி பணத்தை உங்களுக்கு அனுப்புவார்கள்.
பொருளாதார மந்த நிலை நிலவுகிறதா? நமது பொருட்களுக்கு தேவை இருக்குமா?
பொருளாதார நிலை மந்தமாக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வருடம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான், தசரா ஆன்லைன் விற்பனையில் முதல் நாள் விற்பனை வைத்து பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. அந்த அளவுக்கு அமோக விற்பனை நடந்திருக்கிறது. ஆன்லைன் விற்பனையில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது உங்களுடைய பொருட்களின் விற்பனை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.
பிளிப்கார்ட் விற்பனையாளரின் வெற்றி கதை
பிளிப் கார்ட்டின் ஒரு வெற்றி கதையை பார்ப்போம். ஹரியானா மாநிலத்தில் சோனிபட் என்ற ஊருக்கு அருகில் வசிக்கும் ரித்து கவுசிக் பிளிப்கார்ட்டில், தான் தயாரித்த பெண்களுக்கான கைப்பைகளை முதலில் விற்க ஆரம்பித்தார். பின்னர் இவற்றை ‘ரித்து பால்’ என்ற பிராண்டில் விற்க ஆரம்பித்தார். இன்றைய நிலவரப்படி, ஆன்லைன் மூலமாக விற்பதன் மூலம் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை லாபமாக சம்பாதிக்கிறார்.
உங்களுக்கு பிளிப்கார்ட் மூலமாக விற்க விருப்பமா அப்படியெனில் seller.flipkart.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள்.
வெற்றியாளராக வாழ்த்துக்கள்!



பாரத் கிராப்ட் போர்ட்டல்


நடுத்தர, சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு உள்ள மிகப்பெரிய கஷ்டமே தாங்கள் தயாரிக்கும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது தான். இந்த கஷ்டத்தை யாராவது போக்கிவிட மாட்டார்களா என்ற ஏங்காத நாட்களே இல்லை. தற்போது மத்திய அரசு அறிவித்தபடி ஒரு புதிய மார்க்கெட்டிங் கூறப்பட்டிருக்கிறது போர்ட்டல் (பாரத் கிராப்ட்) இவர்களுக்காக தொடங்கப்படும் என்றும் அந்த போர்ட்டல் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் ரூபாய் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனைகளை எட்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.



இந்தியாவில் நடுத்தர சிறிய மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 29 சதவீத ஜிடிபி பங்களிப்பை தருகின்றன. பதினோரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.இந்தியாவின் ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பை தருகின்றது. அரசாங்கம் கூறும் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட இவர்களின் பங்களிப்பு 50 சதவீதமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அது இந்தியாவில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு பிரச்சனைகளை தீர்க்க உதவும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க அது உதவும்.



ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்கும் முன்பு நீங்களே கேட்டுகொள்ள வேண்டிய கேள்விகள்.


ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி ஆரம்பிக்கும் முன்பு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளை கீழே கொடுத்துள்ளோம். இந்தக் கேள்விகளுக்கு உங்களால் சரியாக பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் ஒரு நல்ல சக்சஸ்புல் ஸ்டார்ட் அப் தொழிலதிபராக மாறுவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது.



ஏன் நீங்கள் ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்று விரும்புகிறீகள்? காரணங்களை பட்டியலிடுங்கள்.



உங்களுக்கு ஸ்டார்ட் அப் மைண்ட் செட் இருக்கிறதா? அப்படி இருக்குமானால் அது ஸ்டார்ட் அப் வேலையாளி ஆகும் மனோநிலையா? அல்லது ஸ்டார்ட் அப் தொழிலதிபர் ஆகும் மனோநிலையா?



உங்களிடம் இருக்கும் ஸ்டார்ட் அப் ஐடியா தொழில் ரீதியாக வெற்றி பெறுமா என்று சோதனை செய்து பார்த்துள்ளீர்களா? இந்த சோதனை செய்யாமல் நீங்கள் ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் பட்சத்தில் அது உங்களுடைய பேங்க் பேலன்சை மிகவும் கடிக்கும். காரணம் உங்கள் சோதனை வெற்றிகரமாக இல்லாமல் போயிருக்கலாம்.



உங்களுடைய முதல் 100 வாடிக்கையாளர்களைப் பெற என்னென்ன முயற்சிகள் எடுக்கலாம் என்று தீர்மானித்து உள்ளீர்கள்?



உங்களுடைய தொழிலை மேம்படுத்த நினைக்கும்போது என்னென்ன மாதிரியாக மேம்படுத்தலாம் எப்படி மேம்படுத்தலாம் என்று தீர்மானித்துள்ளீர்கள்?



நீங்கள் ஆரம்பிக்க நினைக்கும் ஸ்டார்ட் அப் தொழிலுக்கு என்ன மாதிரியான முதலீடுகளை பெற நினைக்கிறீகள்?



உங்கள் தொழிலின் ஐந்து வருட லாப நஷ்ட கணக்கு விவரங்கள்



உங்களுடைய ஸ்டார்ட் அப் தொழிலுக்கு என்ன மாதிரியாக மார்க்கெட்டிங் செய்ய விரும்புகிறீர்கள்?



உங்களுடைய ஸ்டார்ட்அப் தொழிலில் ஒருவேளை நஷ்டம் வருமானால், உங்களுடைய தாங்கும் கெப்பாசிட்டி எவ்வளவு என்ற தீர்மானத்துள்ளீர்களா? அந்த அளவைவிட தாண்டி தொடர்ந்து முதலீடுகளை செய்து நஷ்டங்களை பெறக்கூடாது.



மறு உபயோகம் செய்யக்கூடிய சானிடரி நாப்கின்கள்


உலகளவில் தூக்கி எறியப்படும் குப்பைகளில் முக்கியமானவகளில் ஒன்று உபயோகப்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கள். இந்தியாவில் மட்டும் வருடம் தோறும் சுமார் 85 ஆயிரம் கோடி உபயோகப்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்கள் குப்பைகளாக தூக்கி எறியப்படபடுகின்றன.



டெல்லியைச் சேர்ந்த சான்பி என்ற ஸ்டார்ட் அப் கம்பெனி, திருப்பி உபயோகிக்க கூடிய அதாவது மறு உபயோகம் செய்யக்கூடிய சானிடர் நாப்கின் களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சானிடரி நாப்கின் கள் வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதை சுமார் 120 தடவை மறு உபயோகம் செய்யலாம். இதன் விலை சுமார் இருநூறு ரூபாய் ஆகிறது.



மறு உபயோகம் செய்யக்கூடிய சானிடரி நாப்கின்கள் சந்தையில் இருந்தாலும், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சானிடரி நாப்கின் கள் அதைவிட சிறந்தவையாக கருதப்படுகிறது.



தற்போது இந்த வகை சானிட்டரி நாப்கின்கள் ஆன்லைன் ஸ்டோர்கள் மூலமாக கிடைக்கின்றன. மேலும் ரீடைல் கடைகள் மூலமாக விற்கப்படுகிறது.



இவர்களுடைய இணையதளம் www.sanfe.in.



இவர்கள் பெண்கள் சுகாதாரத்திற்காக இன்னும் பல பொருட்களை தயாரித்துள்ளனர். இவற்றை இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.



இந்தூர் நம்கின்


வருடத்திற்கு 17 லட்ச ரூபாய்க்கு இனிப்பு மற்றும் கார வகைகளை வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அப்பா. அப்பாவின் மறைவுக்குப் பிறகு அந்த தொழிலை மகன் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. 2012 ம் வருடம் இந்த தொழிலை மகன் கையில் எடுக்கும்போது முதலில் செய்ய நினைத்தது மிகவும் பழையதாக இருந்த கடையை புதுப்பிப்பது, மேலும் உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பாக்டரியை சுகாதாரமாகவும், புதிதாகவும் இருக்க முயற்சி செய்தார். கடைக்கு வருபவர்களிடம் அப்பாவின் மறைவுக்குப் பிறகு தான் செய்த சீர்திருத்தங்களை சொன்னார். தன்னுடைய கடையில் விற்பனை பொருட்களை பிராண்டிங் ஆக்கினார், பேக்கிங் வடிவங்களை மாற்றினார், பொருடகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் தயாரித்தார், விலையை சிறிது கூட்டினார். வியாபாரம் சடசடவென கூடியது. 2017 ஆம் வருடம் இவருடைய கடையின் விற்பனை 1 கோடியே 70 லட்சமாக உயர்ந்தது. இந்தூரில் மிகவும் புகழ்பெற்ற "இந்தூர் நம்கின்" கடையின் புதிய அத்தியாயம் இது தான்.



பைக் சவாரி


நீங்கள் ஒரு தனி ஆளாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். டாக்ஸி, ஆட்டோ என்றால் மிகவும் அதிகமாக செலவு ஆகும், சில சமயம் கிடைக்கவும் கிடைக்காது . என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? இப்போது பல ஊர்களில் பைக் சர்வீஸ் வந்து விட்டது. ஆமாம், பைக்கில் நீங்கள் பில்லியன் ரைடராக உட்கார்ந்து கொண்டு செல்லலாம். உங்களுக்கு தேவையான இடத்தில் கொண்டு சென்று விட்டு விட்டு வருவார்கள் இந்த பைக் ரைடர்கள். என்ன லாபம்? பைக்கில் செல்வதால் வேகமாக நீங்கள் நினைத்த இடத்தை அடையலாம், கட்டணம் குறைவு, உங்கள் இரு சக்கர வாகனமாக இருந்தால் நிறுத்த இடம் தேடி அலைய வேண்டும் – இதில் இல்லை, பார்க்கிங் சார்ஜ் இல்லை (மிச்சம்), வாகனத்தில் நீங்கள் பில்லியன் ரைடராக செல்வதால் உங்களுக்கு வாகன இன்சூரன்ஸ் எடுக்கப்படுகிறது ஒவ்வொரு ரைடுக்கும், இது போல இரு சக்கர வாகனங்களை தற்போது கார், ஆட்டோ புக் செய்வது போல செய்யலாம், இது போன்ற வசதிகளை பல ஊர்களில் பல கம்பெனிகள் செய்கின்றன.

நீங்கள் கோவா நகரத்திற்கு சென்றிருந்தால் அங்கு இந்த வசதிகள் காலம் காலமாக இருப்பதை கண்டிருக்கலாம். ஆனால், அங்கு இதை நடத்துபவர்கள் தனிப்பட்ட நபர்கள். அவர்கள் வைத்திருக்கும் ஒன்று அல்லது இரண்டு பைக்குகளை வைத்து இதை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த சர்வீஸ் புரபெஷனலாக பல கம்பெனிகளில் வாயிலாக நடத்தப்படுகிறது.

ஒலா (OLA) இந்த சர்வீஸை இந்தியாவில் சுமார் 150 நகரங்களில் நடத்தி வருகிறது. இதன் மூலம் சுமார் 300,000 தொழில் வாய்ப்புகளை தனிப்பட்ட நபர்களுக்கு உருவாக்கியுள்ளது.

Uber கம்பெனியும் UberMoto என்ற பெயரில் 11 ஊர்களில் இது போன்ற சர்வீஸை நடத்தி வருகிறது.

Bikxie, Rapido, KBikeTaxi, Bogo Bike Taxi, Bikewheelz என்று பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளும் பல ஊர்களில் இது போன்ற சர்வீஸசை நடத்தி வருகின்றன.

டிராபிக் நெருக்கடியை இது போன்ற பைக் சவாரிகள் குறைக்கும் என்பதால் வரவேற்கலாம்.



பிரைவேட் லேபிள் – நல்ல பிசினஸ் – நீங்களும் தொடங்கலாம்


இப்போதெல்லாம் பெரிய சூப்பர் மார்க்கெட்களுக்கு (பிக் பஜார், ரிலையன்ஸ் பிரஷ்ம் மோர் போன்றவை) சென்றால் பல பிரபலமான ப்ராண்டுகளுக்கு நடுவே சில புதிய பிராண்ட்களும் இருக்கும். அந்த புதிய பிராண்டில் எல்லா வகையான பொருட்களும் இருக்கும். அதாவது நீங்கள் சமையல் சம்பந்தமான சாமான்கள் வாங்கப்போனால் அந்த வகைப் பொருட்களில் எல்லாவற்றிலும் இந்த பிராண்ட் உங்களை வாங்கு, வாங்கு என்று தொந்தரவு செய்யும். அந்த பிராண்டை எடுத்து இது யார் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த சூப்பர் மார்க்கெட் கம்பெனியின் தயாரிப்பாக இருக்கும். விலையும் மற்ற பிராண்ட்களை விட குறைவாக இருக்கும். இது தான் பிரைவேட் லேபிள் என்பது. இதன் மூலம் அவர்களுக்கு என்ன பலன் என்றால், அவர்கள் அவர்களுக்கென ஒரு பிராண்ட் கொண்டு வருகிறார்கள், அதன் மூலம் லாபம் நிறைய கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மற்றவர்களின் பிராண்டட் பொருட்களை வாங்கி விற்றல் அதில் சிறிய லாபம் தான் கிடைக்கும். அவர்களுடைய பிராண்டட் பொருட்களை விற்கும் போது மார்ஜின் அதிகமாக இருக்கும்.

அதாவது ஒரு பொருளை பிராண்ட் இல்லாமல் விற்பதற்கும், பிராண்டுடன் விற்பதற்கும் விலை வித்தியாசம் நிறைய இருக்கிறது. உதாரணம் பிராண்டட் பாசுமதி அரிசி ஒரு கிலோ 80 ரூபாய் என்றால், மூட்டையில் வைத்து கிலோ கணக்கில் விற்கும் பாசுமதி அரிசி ஒரு கிலோ 50 ரூபாய் தான் இருக்கும். இது தான் வித்தியாசம். இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆன்லைன் கம்பெனிகளும் சரி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடெய்ல், பிக் பஜார், பிக் பாஸ்கட், பாண்டலூன், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்று எல்லோருமே பிரைவேட் லேபிள்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வருமானம் கூட வேண்டுமே?

உதாரணத்திற்கு பார்ப்போம். பிக் பஜார் கடையில் வைத்திருக்கும் ரேணுகா சுகர், பிரஷ் அண்ட் பியூர் நெய், க்ளீன் மேட் டிடர்ஜெண்ட், கோர்யா மைக்ரோ வேவ் மற்றும் டி.வி., ஜான் மில்லர் சட்டைகள் பொன்றவை இவர்களின் பிரைவேட் லேபிள் ஆகும்.

பிக் பாஸ்கட் என்ற பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியும் தற்போது பிரைவேட் லேபிள் பிசினசில் இறங்கியுள்ளது. இவர்களின் பிராண்ட்கள் - ப்ரஷோ. ராயல், டேஸ்டீஸ், லிண்ட்பெர்க், ஹாப்பி ஷெப் போன்றவை. இதில் காஸ்மட்டிக்ஸ, இன்னொன்று இறைச்சி விற்பனை போன்றவையும் அடங்கும். இது தவிர மில்க் சப்ஸ்கிரிப்ஷன் சர்வீஸ். அதாவது பால் வீடுகளுக்கு சப்ளை செய்வதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம் அதில் நிலையான வருமானம் இருப்பதாக பல புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பால் விற்பனையில் அதாவது வீடுகளுக்கு நேரடியாக கொண்டு போய் கொடுக்கும் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளன.

ஆடைகள் விற்பனையில் இது போன்ற பிரைவேட் லேபிள்கள் அதிகம் இருக்கின்றன. பின்னர் இவை பெரிய பிராண்டாகவும் மாறிவிடுகின்றன.



நீங்கள் சிறிய கடை வைத்திருந்தாலும் இது போன்ற பிரைவேட் லேபிள் (உங்கள் பிராண்டை) உண்டாக்கலாம். அது பெரிய உங்களூரில் பெரிய பிராண்டாகவும் மாறலாம்.



உங்கள் வியாபாரம் பெருக சிறுதொழில்களுக்கு உதவும் அரசாங்க இணையதளம் - சேதுராமன் சாத்தப்பன்


தேசிய சிறுதொழில் நிறுவனம் (The National Small Industries Corporation Ltd.,) என்பது அரசாங்க நிறுவனம். இந்தியாவின் சிறுதொழில் வளர்ச்சியில் மிகவும் பெரும் பங்காற்றி வருகிறது.

டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் சிறு தொழில்களுக்கு மிகவும் முக்கியமானது என்ற வகையில் சிறு தொழில்களுக்கு உதவி வருகிறது. சிறு தொழில்களுக்கு ஒரே இடத்தில் எல்லா சேவைகளும் கிடைக்கும் வகையில் ஒரு இணையதளத்தின் மூலம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இணையதளத்தின் பெயர் www.msmemart.com.

இந்த இணையதளத்தில்

அரசாங்கத்திற்கு சரக்குகளை விற்பதற்குஇந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளும் வகையில் உங்களுக்கு அந்த வாய்ப்புகள் நிறைய கிடைக்கிறது.

உள்நாடு, வெளிநாடு அரசாங்க மற்றும் தனியார் நிறுவன டெண்டர்கள் பதி விடப்படுகின்றன. இதை தொடர்ந்து பார்த்து வருவதால் உங்கள் நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் நிறுவனம் வெகு வேகமாக வளர்ச்சி அடைய உங்களுக்கு 24 மணி நேரம் உழைக்கும் ஒரு ஆள் தேவை அதுதான் உங்களுடைய இணையதளம். அந்த வகையில் உங்கள் நிறுவன பொருட்களையும் இந்த இணையத்தில் காட்சிக்கு வைக்கலாம்.

எந்த ஒரு சிறுதொழில் நிறுவனத்திற்கும் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது அவர்களுக்கு கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகள் தான். அந்த வகையில் இந்தியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்த வாய்ப்புகளை ஒருசேர ஒரே இடத்தில் பார்க்க வசதி இருக்கிறது.

வாங்குபவர்களயும், விற்பவர்களையும் இணைக்கும் இணையதளமாகவும் இது இருக்கிறது.

பல நல்ல கம்பெனிகளுக்கு உங்கள் நிறுவனம் பிரான்சைஸி அல்லது டிஸ்ட்ரிபியூஷன்ஷிப் எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

உங்கள் நிறுவனத்துக்கான ஒரு தனியான இணையதள பக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது.

இந்தியாவில் மற்றும் உலக அளவில் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தருகிறது.

இந்த இணையதளத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதில் கோல்டு மெம்பர் எந்த ஒரு வசதியும் இருக்கிறது. ஆனால் அதற்கு வருடாந்திர கட்டணம் ரூபாய் 6000 செலுத்தப்பட வேண்டும். அப்படி செலுத்தும் போது அதற்கான சில கூடுதல் வசதிகளும் தரப்படுகிறது.

எஸ்.சி. / எஸ்.டி., தொழில் முனைவோர்களுக்கு இலவசமாக பல வசதிகள் கிடைக்கிறது.

குறுகியகால கடன் வசதிகளும் உங்கள் சிறு தொழில் நிறுவனத்திற்குஇவர்களால் தரப்படுகிறது. நீண்ட கால கடன் வசதி என்றால்அதை வங்கிகள் மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார்கள்.

இணையதள முகவரி www.msmemart.com, ஈமெயில் முகவரி corporate@msmemart.com.

இவருடைய இணையதளத்திற்கு செல்லுங்கள். வெற்றி பாதையை நோக்கி உங்கள் பயணத்தை தொடருங்கள்.