loading
09 August 2020
Register Here

பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்கள் பொருட்களையும் விற்கலாம் Views 547


கட்டுரையாளர் -சேதுராமன் சாத்தப்பன்

‘பிளிப்கார்ட்’ இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்று. நமது உற்பத்தி பொருட்களின் விற்பனையை எவ்வாறு அதிகரிப்பது என்று எல்லாருக்குமே ஒரு ஆதங்கம் எப்போதும் இருக்கும். இந்த ஆதங்கத்தை போக்க ஆபத்பாந்தவனாக வருகிறது பிளிப்கார்ட்.
ஏன் பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் நீங்கள் விற்க வேண்டும்?
ஆன்லைன் சந்தையில் பிளிப்கார்ட் லீடராக இருக்கிறது. இன்றைய தினம் அதன்கீழ் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 80 லட்சம் ஷிப்மெண்ட் அனுப்புகிறார்கள். அதுவும் இந்தியாவில் ஆயிரம் ஊர்களுக்கு மேலாக. அங்கெல்லாம் பொருட்களை அனுப்பும் வசதி அவர்களிடம் இருக்கிறது.
பிளிப் கார்ட்டில் இருந்து நமக்கு பணம் எப்படி கிடைக்கிறது?
நீங்கள் அவர்களிடம் பதிவு செய்து கொண்ட பிறகு, உங்கள் பொருட்களை விற்றவுடன் உங்களுக்கு பணம் 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் கிடைத்துவிடுகிறது.
உங்கள் பொருட்கள் விலையை யார் நிர்ணயிப்பார்கள்?
ஆன்லைனில் விற்கும்போது உங்கள் பொருட்களின் விலையை நீங்களே நிர்ணயித்து கொள்ளலாம். ஆனால் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களைப் போலவே, உங்கள் பொருட்களை போலவே விற்பனை செய்யும் பலர் இந்த ஆன்லைன் சந்தையில் இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், உங்கள் பொருட்களின் விலை நியாயமாக இருக்கும் பட்சத்தில்தான் உங்களுக்கு வியாபார வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தையில் உங்களது பொருட்களை சந்தைப்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமா ?
ஆன்லைன் சந்தையில் உங்கள் பொருட்களை காட்சிப்படுத்த பணம் எதுவும் கட்ட வேண்டாம். ஆனால் நீங்கள் சரக்குகளை பிளிப்கார்ட் ஆன்லைன் சந்தை மூலமாக விற்ற பின் அவர்களுக்கு ஒரு கமிஷன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்த கமிஷனை கழித்துக்கொண்டு மீதி பணத்தை உங்களுக்கு அனுப்புவார்கள்.
பொருளாதார மந்த நிலை நிலவுகிறதா? நமது பொருட்களுக்கு தேவை இருக்குமா?
பொருளாதார நிலை மந்தமாக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இந்த வருடம் பிளிப்கார்ட் மற்றும் அமேசான், தசரா ஆன்லைன் விற்பனையில் முதல் நாள் விற்பனை வைத்து பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை. அந்த அளவுக்கு அமோக விற்பனை நடந்திருக்கிறது. ஆன்லைன் விற்பனையில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது உங்களுடைய பொருட்களின் விற்பனை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.
பிளிப்கார்ட் விற்பனையாளரின் வெற்றி கதை
பிளிப் கார்ட்டின் ஒரு வெற்றி கதையை பார்ப்போம். ஹரியானா மாநிலத்தில் சோனிபட் என்ற ஊருக்கு அருகில் வசிக்கும் ரித்து கவுசிக் பிளிப்கார்ட்டில், தான் தயாரித்த பெண்களுக்கான கைப்பைகளை முதலில் விற்க ஆரம்பித்தார். பின்னர் இவற்றை ‘ரித்து பால்’ என்ற பிராண்டில் விற்க ஆரம்பித்தார். இன்றைய நிலவரப்படி, ஆன்லைன் மூலமாக விற்பதன் மூலம் மாதம் 8 லட்சம் ரூபாய் வரை லாபமாக சம்பாதிக்கிறார்.
உங்களுக்கு பிளிப்கார்ட் மூலமாக விற்க விருப்பமா அப்படியெனில் seller.flipkart.com என்ற இணையதளத்தில் சென்று பாருங்கள்.
வெற்றியாளராக வாழ்த்துக்கள்!