loading
31 May 2020
Register Here

பிரைவேட் லேபிள் – நல்ல பிசினஸ் – நீங்களும் தொடங்கலாம் Views 537


இப்போதெல்லாம் பெரிய சூப்பர் மார்க்கெட்களுக்கு (பிக் பஜார், ரிலையன்ஸ் பிரஷ்ம் மோர் போன்றவை) சென்றால் பல பிரபலமான ப்ராண்டுகளுக்கு நடுவே சில புதிய பிராண்ட்களும் இருக்கும். அந்த புதிய பிராண்டில் எல்லா வகையான பொருட்களும் இருக்கும். அதாவது நீங்கள் சமையல் சம்பந்தமான சாமான்கள் வாங்கப்போனால் அந்த வகைப் பொருட்களில் எல்லாவற்றிலும் இந்த பிராண்ட் உங்களை வாங்கு, வாங்கு என்று தொந்தரவு செய்யும். அந்த பிராண்டை எடுத்து இது யார் தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த சூப்பர் மார்க்கெட் கம்பெனியின் தயாரிப்பாக இருக்கும். விலையும் மற்ற பிராண்ட்களை விட குறைவாக இருக்கும். இது தான் பிரைவேட் லேபிள் என்பது. இதன் மூலம் அவர்களுக்கு என்ன பலன் என்றால், அவர்கள் அவர்களுக்கென ஒரு பிராண்ட் கொண்டு வருகிறார்கள், அதன் மூலம் லாபம் நிறைய கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. மற்றவர்களின் பிராண்டட் பொருட்களை வாங்கி விற்றல் அதில் சிறிய லாபம் தான் கிடைக்கும். அவர்களுடைய பிராண்டட் பொருட்களை விற்கும் போது மார்ஜின் அதிகமாக இருக்கும்.

அதாவது ஒரு பொருளை பிராண்ட் இல்லாமல் விற்பதற்கும், பிராண்டுடன் விற்பதற்கும் விலை வித்தியாசம் நிறைய இருக்கிறது. உதாரணம் பிராண்டட் பாசுமதி அரிசி ஒரு கிலோ 80 ரூபாய் என்றால், மூட்டையில் வைத்து கிலோ கணக்கில் விற்கும் பாசுமதி அரிசி ஒரு கிலோ 50 ரூபாய் தான் இருக்கும். இது தான் வித்தியாசம். இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆன்லைன் கம்பெனிகளும் சரி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ரீடெய்ல், பிக் பஜார், பிக் பாஸ்கட், பாண்டலூன், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்று எல்லோருமே பிரைவேட் லேபிள்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். வருமானம் கூட வேண்டுமே?

உதாரணத்திற்கு பார்ப்போம். பிக் பஜார் கடையில் வைத்திருக்கும் ரேணுகா சுகர், பிரஷ் அண்ட் பியூர் நெய், க்ளீன் மேட் டிடர்ஜெண்ட், கோர்யா மைக்ரோ வேவ் மற்றும் டி.வி., ஜான் மில்லர் சட்டைகள் பொன்றவை இவர்களின் பிரைவேட் லேபிள் ஆகும்.

பிக் பாஸ்கட் என்ற பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் கம்பெனியும் தற்போது பிரைவேட் லேபிள் பிசினசில் இறங்கியுள்ளது. இவர்களின் பிராண்ட்கள் - ப்ரஷோ. ராயல், டேஸ்டீஸ், லிண்ட்பெர்க், ஹாப்பி ஷெப் போன்றவை. இதில் காஸ்மட்டிக்ஸ, இன்னொன்று இறைச்சி விற்பனை போன்றவையும் அடங்கும். இது தவிர மில்க் சப்ஸ்கிரிப்ஷன் சர்வீஸ். அதாவது பால் வீடுகளுக்கு சப்ளை செய்வதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம் அதில் நிலையான வருமானம் இருப்பதாக பல புள்ளி விபரங்கள் கூறுகின்றன. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பால் விற்பனையில் அதாவது வீடுகளுக்கு நேரடியாக கொண்டு போய் கொடுக்கும் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளன.

ஆடைகள் விற்பனையில் இது போன்ற பிரைவேட் லேபிள்கள் அதிகம் இருக்கின்றன. பின்னர் இவை பெரிய பிராண்டாகவும் மாறிவிடுகின்றன.



நீங்கள் சிறிய கடை வைத்திருந்தாலும் இது போன்ற பிரைவேட் லேபிள் (உங்கள் பிராண்டை) உண்டாக்கலாம். அது பெரிய உங்களூரில் பெரிய பிராண்டாகவும் மாறலாம்.